பிரித்தானியர் ஆட்சி காலத்தில் 1850 ஆம் ஆண்டு ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் வைத்தியசாலை எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது அக்கால பகுதியில் இயற்கை மூலிகை மருத்துவமே இலங்கை முழுவதும் காணப்பட்டது. பிரித்தானிய இளவரசியால் நியமனம் செய்யப்பட்ட அக்கால யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த சேர் பேர்சிவல் அக்லாண்ட் டைக் (Sir Percival Acland Dyke) அவர்கள் ஆங்கில மருத்துவத்தை (Western medicine / allopathic medicine / English medicine) மேற்படி வைத்திய சாலையில் ஊடாக அறிமுகம் செய்து வைத்தார்.
அக்கால பகுதியில் அமெரிக்க மிஷனரி மருத்துவர் சாமுவேல் பிஸ்க் கிறீன் (Dr. Samuel Fisk Green) மாணிப்பாய் கிரீன் வைத்திய சாலையில் கடமை செய்து கொண்டிருந்தார். ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் வைத்தியசாலை யாழ் நகரில் ஆரம்பிக்கப்பட்டதும் இந்த வைத்தியசாலையில் கடமையாற்றிய முதலாவது சத்திர சிகிச்சை நிபுணர் (Visiting Surgeon) என்ற சிறப்பைப் பெறுகின்றார். மானிப்பாயில் மருத்துவர் கிறீன் 1848 இல் தாபித்த மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவர்களும் உள்ளகப் பயிற்சியை இந்த மருத்துவமனையில் (FINS Hospital) 1850களின் பின்னரான காலத்தில் பெற்றிருக்கிறார்கள். 56 வருடங்களாக ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலையாக இயங்கிய நிலையில் 1907 ஆண்டில் யாழ்ப்பாண சிவில் வைத்தியசாலை (Jaffna Civil Hospital) என பெயர் மாற்றம் பெற்றது. 1956 ஆம் ஆண்டு வைத்தியசாலை மேலும் வசதிகளைப் பெற யாழ்ப்பாண பொது வைத்தியசாலை (Jaffna General Hospital) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப்பீடம் 1978 இல் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் உள்ளகப் பயிற்சி மாணவர்கள் இங்கு வருகை தந்ததைத் தொடர்ந்து இந்த வைத்தியசாலையானது போதனா மருத்துவமனையாகத் தரமுயர்ந்தது. யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையானது 1986 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சினால் உத்தியோகபூர்வமாக போதனா மருத்துவமனையாகத் தரமுயர்த்தப்பட்டது.
கடந்த 175 வருட யாழ்ப்பாண வைத்தியசாலையின் சுவை வட பகுதியின் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கியதுடன் இலங்கை நாட்டில் மாத்திரமில்லாத உலகெங்கும் வடபகுதி வைத்தியர்கள் உருவாகுவதற்கு வைத்தியசாலை மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி இருக்கின்றது. நீண்ட சரித்திரத்தைக் கொண்ட இந்த வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், நிறைகாண் மருத்துவ சேவையாளர்கள், துணைமருத்துவ சேவையாளர்கள், மேற்பார்வையாளர்கள், சுகாதார உதவியாளர்கள், தொண்டர்கள் முதலான பல்துறையினரும் அர்ப்பணிப்பு மிக்க சேவையை வழங்கி அரச, இலவச மருத்துவ சேவைக்கு பங்களித்திருக்கிறார்கள்.
யாழ். போதனா மருத்துவமனை 175ஆவது ஆண்டு சிறப்புமலர்: யாழ். போதனா மருத்துவமனை தாபிக்கப்பட்டு 175 ஆவது ஆண்டை சிறப்பிக்கும் முகமாக வெளியிடவுள்ள சிறப்புமலரில் பிரசுரிக்க வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள், நிருவாகிகள், தாதிய உத்தியோகத்தர்கள், நிறைகாண் மருத்துவ சேவையாளர்கள், துணைமருத்துவ சேவையாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், மேற்பார்வையாளர்கள், சுகாதார உதவியாளர்கள் முதலானோரிடம் இருந்து தரமான ஆக்கங்களை, ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களின் சேவைக்கால அனுபவங்களை, தகவல்களை, வரலாற்றுக் குறிப்புக்களை, அரிதான நியமனக் கடிதங்கள்- சான்றிதழ்கள் -புகைப்படங்களை எதிர்பார்க்கின்றோம். மேலும் இங்கு 50 வருடங்களுக்கு முன்னர் கடமையாற்றிய மருத்துவர்கள், தாதியர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள், ஆர்வலர்கள் தங்களிடம் உள்ள புகைப்படங்களை, தகவல்களை, ஆதாரங்களைத் தந்து சிறப்பு மலரின் ஆவணப்படுத்தலுக்கு உதவுமாறு வேண்டுகின்றேன்.
தங்கள் ஆக்கங்களை, தகவல்களை, ஆதாரங்களை போதனா மருத்துவமனை மருத்துவ அருங்காட்சியக மற்றும் தொலைமருத்துவப் பிரிவு பொறுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு பா. துவாரகன் என்பவரது +94774534157 என்ற உவட்ஸப் (WhatsApp) இலக்கத்துக்கு, baladhuvarahan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
